செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

அன்பினால் ஆயுதம் செய்க....

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

அன்பு - இறை

எல்லாம் அன்பின் செயல்.

அப்படி என்றால், நம்மில்  நடப்பில் இருக்கும் நல்லவை தீயவைக்கும் அன்பு தான் காரணமாகிறது.

இட்லரையும், புத்தரையும் உருவாக்கியது அன்பே.

அறத்துக்கே அன்பு சார்பென்ப - அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

மனமற்ற நிலையில் - முழுமையிலேயே அன்பு அமுதமாகிறது.

மனதின் கேடுகள்  அன்பை நஞ்சாக்குகிறது.

மலரின் மெல்லிது காமம் - சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

நுட்பமான  மனமும் அன்பை நஞ்சாக்கி விடும்.

மனம் நமக்கு இந்த சமூதாயம் வழங்கிய கேடே. நல்லது கெட்டது என நாம் பிரித்துப் பார்ப்பது எல்லாம் நாம் இந்த சமுதாயத்தில் இருந்து பெற்ற அளவுகோல்களின் அடிப்படையிலேயே.

உண்மை முழுமையானது. பிரிவில்லாதது. பிரிக்க முடியாதது. நம்முள் பிறக்கும் அன்பை - தூய எண்ணத்தை  மனம் பிளவுபடுத்தி கேடானதாக, சார்புள்ளதாக, தனிஉடமையாக்கி, எனது எனும் கேட்டை உருவாக்குகிறது.

உலகில் உடல் நோயாளிகளும்,  மன நோயாளிகளும், வன்முறையாளர்களும், அகிம்சாவாதிகளும், நாத்தீகவாதிகளும், ஆன்மீக வாதிகளும் மனதின் கேட்டாலேயே உருவாகிறார்கள். அவர்கள் இவ்வாறு சார்புடையவர்களானதற்கு, எனது எனும் தற்பெருமையே காரணம்.

எவ்வளவு மோசமானவர்களானாலும் அவர்கள் அவ்வாறானதற்கும், அதிலிருந்து நலம் பெறுவதற்கும்  அவர்களின் அடிப்படைத் தேவையான அன்பின் தேடலே காரணம் ஆகும்.

சார்புடைய மனதால் அன்பைத் தேடுபவர்கள் நஞ்சைப் பெறுகிறார்கள். முழுமையை உணர்ந்தவர்கள் அமுதத்தை பெறுகிறார்கள்.

பகிர்ந்து கொள்ளப்படாத - பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் அன்பு நஞ்சாகிறது.

இதுவரை உலகில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்து போர்களுக்கும் காரணம், விழிப்புணர்வற்ற மனிதர்களின் அன்பே.


விழிப்புணர்வுடன் கூடிய அன்பே நன்மை தரும் ஆயுதம். வெற்றி தரும் ஆயுதம். எல்லோரும் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.